பாலமேடு ஜல்லிக்கட் டு மாடு முட்டி இளைஞர் உயிரிழப்பு

பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று ஆரவாரத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான காளைகள், ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்களுடன் சுற்றுப்பகுதியில் உள்ள கிராம மக்கள் வெளியூரிலிருந்து ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வந்தவர்கள் என பாலமேடு பகுதி முழுதும் திருவிழா போல் கோலாகலமாக உள்ளது.அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக அளவில் பிரசித்தி பெற்றவை. நேற்று பெரிய அளவில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவுப்பெற்றது. இன்று பாலமேடு ஜல்லிக்கட்டும் காலை முதலே உற்சாகத்துடன் நடந்து வருகிறது.வழக்கம் போலவே மாடுபிடி வீரர்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் உடல் நிலை சோதிக்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டு குழுவாக இறக்கி விடப்படுகின்றனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் 1188 வீரர்கள் பதிவு செய்து தேர்வாகியுள்ளனர். 1002 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.பதிவு செய்யப்பட்ட வீரர்கள் நான்கு அணியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காளைகள், நேரம் ஒதுக்கப்படுகிறது. சிறப்பாக செயல்படும் மாடுபிடி வீரர்கள் அடுத்த அணியிலும் தொடர்கிறார்கள்.மாடுகள் 1002 பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவைகள் கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. உள்ளூரில் கால்நடை மருத்துவர் சான்றுடன் காளைகள் விண்ணப்பிக்கப்பட்டாலும் காளைகளை ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திலும் மருத்துவர்கள் சோதித்த பின்னரே அனுமதிக்கின்றனர்.காளைகளுக்கு 3 வயது ஆகியிருக்க வேண்டும், இரண்டு பற்கள் இருக்க வேண்டும், 4 அடி உயரம் இருக்க வேண்டும் என்ற அடிப்படை நிபந்தனைகள் கடைபிடிக்கப்படுகிறது. இன்று சுமார் 700 காளைகள் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் என தெரிகிறது.இதனிடையே ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நத்தம் சாணார்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து (19) என்பவர் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.