பார்வையற்றோர் தேசத்தில் ஒற்றைக் கண் உடையவரே மன்னன்: ரகுராம் ராஜன் ஒப்பீடு

raghuramசர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டத்திற்காக வாஷிங்டன் சென்றுள்ள மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், இந்தியப் பொருளாதாரம் குறித்துக் கூறும்போது, “பார்வையற்றோர் நாட்டுக்கு ஒரு கண் உள்ளவர் ராஜா” என்று ஒப்புமை ரீதியாக பதில் அளித்தார்.

அதாவது மற்ற நாடுகளின் பொருளாதார நிலவரங்கள் தடுமாற்றத்தில் இருக்கும் போது இந்தியப் பொருளாதாரம் நம்பிக்கையளிக்கும் விதத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது என்பதையே ரகுராம் ராஜன் இந்த ஒப்பீடு மூலம் அர்த்தப்படுத்தியுள்ளார்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நிதி ஆணையமான ஐ.எம்.எஃப். ஆகியவை உலகப் பொருளாதாரத்தில் இந்தியப் பொருளாதாரம் ஒரு பிரகாசமான பகுதி என்று கூறப்படுவதை அடுத்து ரகுராம் ராஜன் இவ்வாறு கூறியுள்ளார்.

வால்ஸ்ட்ரீட் டிஜிட்டல் நெட்வொர்க் அங்கமான டவ்ஜோன்ஸ் அண்ட் கோ-வின் மார்கெட் வாட்ச் என்ற ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் ரகுராம் ராஜன் கூறியதாவது:

“இன்னும் திருப்தி அளிக்கக் கூடிய இடத்துக்கு நாம் செல்ல வேண்டுமென்று கருதுகிறேன். ‘பார்வையற்றோர் நாட்டிற்கு ஒரு கண் உள்ளவர் ராஜா’ என்ற மூதுரை நம்மிடையே புழக்கத்தில் உள்ளது. நாம் சிறிது அத்தகைய வழியில் சென்று கொண்டிருக்கிறோம்.

முதலீடுகள் வலுவாக அதிகரித்து வருகின்றன. பெரும்பொருளாதா உறுதித்தன்மை நம் பொருளாதாரத்தில் நல்ல அளவுக்கு ஏற்பட்டுள்ளது. இதைக் கூறும் அதேவேளையில் உலகப் பொருளாதார அதிர்ச்சியில் பாதிக்கப்படாத பாதுகாப்பை எய்திவிட்டோம் என்று கூறவியலாது, ஆனால் பெரும்பான்மையான அதிர்ச்சிகளுக்கு நம் பொருளாதாரம் பாதுகாப்பாகவே உள்ளது..