சென்னையில் சுட்டெரிக்கும் வெயில்- கடற்கரைக்கு படையெடுக்கும் பொதுமக்கள் கூட்டம்

BEACH1_108755gஅக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே சென்னையில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது..தமிழகத்தில் மே மாதம் 4-ந் தேதி ‘அக்னி நட்சத்திரம்’ தொடங்குகிறது. அந்த சமயத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 100 டிகிரியில் இருந்து 110 டிகிரிக்கும் மேல் வெயில் கொளுத்துவது வழக்கம். இன்னும் ‘அக்னி நட்சத்திரம்’ தொடங்காத நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. இந்த வெயிலினால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே அச்சம் அடைந்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்றுடன் கடுமையான வெப்பம் பதிவாகும் என்றும், சென்னையில் அடுத்த 2 நாட்களில் 105.8 டிகிரி வரை வெயில் கொளுத்தும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் நேற்று கடுமையான வெயில் கொளுத்தியதோடு அனல்காற்றும் வீசியது. சாலைகளில் வெயிலின் தாக்கத்தினால் பல இடங்களில் கானல் நீர் தெரிந்தது. வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள இளம்பெண்கள் பலர் குடை பிடித்த படியும், துப்பட்டாவை தலையில் போர்த்திய படியும் சாலைகளில் செல்வதை பார்க்க முடிந்தது. பலர் தங்களுடைய கைகளின் சூரிய ஒளி படாதவாறு கை உறைகளை அணிந்து சென்றனர்.
வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தை தணிப்பதற்காக மக்கள் பழச்சாறு, இளநீர், தர்ப்பூசணி ஆகிய கடைகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் சாலைகளில், ஆங்காங்கே பழச்சாறு, கற்றாழை ஜூஸ் ஆகிய கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.