கடலுக்குச் செல்லவேண்டாம்: பாம்பனில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் கடந்த வாரம் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ‘ஒக்கி’ புயலாக மாறி கன்னியாகுமரி, நெல்லை,தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது.மேலும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் மாயமாகியுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க இந்தியக் கடற்படை, கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும், இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மசூலிப்பட்டினத்திற்குத் தென்கிழக்கே 1,160 கிலோ மீட்டர் தொலைவிலும், கோபால்பூருக்கு 1,250 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை அறிவித்துள்ளது.தமிழக மீன்வளத்துறையினர், ”மீனவர்கள் டிசம்பர் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை வங்கக்கடல் ஆழ்கடல் பகுதிகளுக்கும், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கடல் பகுதிகளுக்கும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.