ஈக்குவடார் நில நடுக்கத்தில் பலிசானோர் எண்ணிக்கை 77 ஆக உயர்வு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது–மீட்பு பணியில் ராணுவம்

201604171208182129_Ecuador-Earthquake-Kills-at-Least-41_SECVPF

ஈக்குவடார் நாட்டில் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் 77 பேர் பலியாகினர். கடலோர பகுதிகளில் ராணுவம் மீட்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறது.
தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரில் மியூஸ்னி நகருக்கு 27 கி.மீ. தொலைவில் 19.2 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் ஏற்பட்டது.ரிக்டர் அளவுகோலில் இது 7.8 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் கூறிஉள்ளது. பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், சுனாமி எச்சரிக்கை அறிவித்து, பின்னர் திரும்பப்பெற்றது. நில நடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீடுகளையும், கட்டிடங்களையும் விட்டு வெளியேறி வீதிகளுக்கு ஓடி வந்து தஞ்சம் புகுந்தனர். நில நடுக்கத்தாலும், அதிர்வுகளாலும் கட்டிடங்கள் குலுங்கி, இடிந்து விழுந்ததால் மக்களிடம் பெரும் பதற்றம் நிலவியது. பல்வேறு பகுதிகளில் பாலங்கள் இடிந்து விழுந்தன. சாலைகள் உருக்குலைந்து போயின. இந்த நில நடுக்கத்தை தொடர்ந்து முழுவீச்சில் மீட்பு படையினர் களமிறங்கி மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் முழுக்கவனம் செலுத்தி வருகின்றனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதும் கடலோர பகுதிகளுக்கு ராணுவம் அனுப்பப்பட்டது. கடலோரப்பகுதி மக்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து மேடான பகுதிகளுக்கு சென்றனர். 10,000 ராணுவ வீரர்கள் கடலோர பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட அனுப்பப்பட்டனர். சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டாலும் அங்கு தொடர்ந்து முழுவீச்சில் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

நிலநடுக்கத்திற்கு 77 பேர் பலியாகி உள்ளனர். 588 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.“நிலநடுக்கம் 77 பேரின் உயிர்களை பலி கொண்டு விட்டது. 588 பேர் படுகாயம் அடைந்தனர். உயிர்ப்பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களை சென்றடைவது கடினமாக உள்ளது,” என்று துணை அதிபர் ஜார்ஜ் கிளேஸ் கூறி உள்ளார். ஈக்குவடாரில் கடந்த 1979-ம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட மிக மோசமான நில நடுக்கம் இது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 1979-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 600 பேர் உயிரிழந்தனர், 20 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.