அதிமுக ஐடி பிரிவுக்கு 45,000 நிர்வாகிகள் நியமனம் : சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க புதிய வியூகம்

 
கரோனா ஊரடங்கால் சமூக வலைதளங்கள் மீது மக்கள் கவனம் பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அதிமுக ஐடி பிரிவுக்கு 45000 நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் அதிமுக, திமுக மற்றும் மற்ற இன்னும் பிற அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தற்போதே தயாராகி வருகின்றன.
 
அதிமுகவை பொறுத்தவரையில் 50 மாவட்டமாக இருந்த கட்சி உள்கட்டமைப்பை 67 மாவட்டமாகப் பிரித்து புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து கொண்டிருக்கின்றனர்.
 
உதாரணத்துக்கு மதுரை மாவட்டம் முன்பு, மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம் என இரண்டு மாவட்டமாக செயல்பட்டது. மக்களவைத் தேர்தல் நேரத்தில் புறநகர் மாவட்டம், கிழக்கு மற்றும் மேற்கு என 2 ஆக பிரிக்கப்பட்டது.
 
மேற்கு மாவட்டத்திற்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமாரும், கிழக்கு மாவட்டத்திற்கு முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பாவும் நியமிக்கப்பட்டனர்.
 
ஆனால், சார்பு அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. கடந்த வாரம், இந்த இரு மாவட்டங்களுக்கும் மாவட்ட அளவில் சார்பு அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
விரைவில் ஒன்றியம், நகரம், பேரூர், கிளை அளவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான பட்டியல் தயாராகிக் கொண்டிருக்கிறது. மாவட்டங்கள் கூடுதலாக்கப்பட்டதால் இளைஞர்கள், இதுவரை பதவி கிடைக்காமல் இருந்த சீனியர் நிர்வாகிகள் பலருக்கும் பதவிகள் கிடைத்துள்ளன. அதனால், அவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட ஆர்வமாக உள்ளனர்.
 
வரும் சட்டப்பேர்வைத் தேர்தலில் சமூக இடைவெளி என்ற கரோனா கட்டுப்பாடு நீடிக்கும் வாய்ப்பு இருப்பதால் தேர்தலில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதனால்,ஜெயலலிதா காலத்தில் இளைஞர், இளம்பெண்கள் பாசறை முக்கியத்துவம் பெற்றதுபோல் தற்போது அதிமுகவில் ‘ஐடி விங்’ முக்கியத்துவம் பெற ஆரம்பித்துள்ளது.
 
இதுகுறித்து ஐடி பிரிவு நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
 
அதிமுகவைப் பொறுத்தவரையில் தலைமை முதல் கிளை வரை ஒரே நபரை சார்ந்து கட்சியில்லை. ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு புதிய தலைவர்கள், நிர்வாகிகள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள். சமீப கால தேர்தல்களில் சமூக வலைத்தளங்கள் முக்கியத்துவம் பெற்றன. தற்போது கரோனா தொற்று நோயால் வரவிருக்கிற சட்டசபை தேர்தலில் சமூக வலைத்தளம் இன்னும் முக்கியத்துவம் பெற போகிறது.
 
அதனால், அதிமுகவின் முக்கிய பிரச்சார அணியாக ஐடி விங் செயல்படும். ஒவ்வொரு கிராமத்து வீட்டில் கூட செல்போன் உள்ளது. அவர்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் அரசு செய்த நலத்திட்ட தகவல்கள், இனி செய்ய உள்ள திட்டங்கள், எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வியூகங்கள் போன்றவற்றை செயல்படுத்த அதிமுக ஐடி விங் முடிவு செய்துள்ளது.
 
மாவட்ட அளவில் மட்டுமில்லாது ஒன்றிய, ஊராட்சி, பேரூர், பஞ்சாயத்து மற்றும் பூத் அளவில் வரை தலைவர், துணைத் தலைவர்கள், இணை செயலாளர்கள், ஒரு பொருளாளர் உள்பட 14 பேர் கொண்ட அமைப்பு நியமிக்கப்பட உள்ளனர்.
 
இந்த அடிப்படையில் முதல்வர் கே.பழனிச்சாமியின் மாவட்டமான சேலம் புறநகரில் மட்டும் ஐடி விங்கிற்கு 1,520 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே பானியில் தமிழகம் முழுவதும் ஐடி விங்கிற்கு 45 ஆயிரம் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
 
இவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து வரை அதிமுக ஆதரவு வாக்காளர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பு பொது வாக்காளர்களை நெருங்க தயார்படுத்தப்படுவார்கள்.
என்று அவர் தெரிவித்தார்.