மிரட்டும் சாகர் புயல்

0

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பாத நிலையில், வட மாவட்டங்களுக்கு புதிய புயல் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது. வந்த பின்னர் வருத்தப்படுவதை விடுத்து வருவதற்கு முன்பாகவே பாதிப்புகளைத் தவிர்க்க வட மாவட்டங்களில் போதிய முன்னெச்சரிக்கைப் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்வங்கக்கடலில் அந்தமான் தீவுகளுக்கும், சுமத்திரா தீவுகளுக்கும் இடையில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை அடுத்த ஓரிரு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரத்தை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புயலாக மாறக்கூடும் என்றும், அப்புயலுக்கு சாகர் என்று பெயரிடப்படவுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களையும், ஆந்திரத்தின் தென் பகுதிகளையும் தாக்கக்கூடும் எனத் தெரிகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகத்தை நோக்கி நகர்கிறது என்ற செய்தியே வட தமிழக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதற்கான காரணம் கடந்த இரு ஆண்டுகளில் மழையாலும்,. புயலாலும் பாதிக்கப்பட்டதை விட அரசு எந்திரத்தின் அலட்சியத்தால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத பாதிப்புகள்தான். 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் செய்த மழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தால் ஏற்பட்ட கோர விளைவுகளின் பாதிப்புகளில் இருந்து அங்குள்ள மக்கள் இன்னும் மீளவில்லை. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இதேகாலத்தில் சென்னையை தாக்கிய வர்தா புயலால் சென்னையில் உள்ள மரங்களில் பெரும்பாலானவை வேருடன் வீழ்ந்தன. மக்களின் உடமைகளுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் இன்று வரை எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை.

அதேபோல் கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளும் இன்னும் சரி செய்யப்படவில்லை. புயல் தாக்கி 5 நாட்களாகும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்வினியோகமும், குடிநீர் வழங்கலும் இன்னும் சீரமைக்கப்படவில்லை. பல கிராமங்கள் இன்னும் துண்டிக்கப்பட்ட நிலையில்தான் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் முழுமையான இயல்பு நிலை திரும்ப இன்னும் சில வாரங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையைக்கூட அரசால் கணக்கிட முடியவில்லை.இத்தகைய சூழலில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை மீண்டும் புயல் தாக்கினால் அதன் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினமானதாக இருக்கும். புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களை தடுக்கும் வல்லமையை இயற்கை நமக்கு வழங்கவில்லை. எனினும், புயல் உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நம்மால் தவிர்க்கவோ, குறைக்கவோ முடியும். ஆனால், அதற்கான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் மேற்கொள்வதில்லை என்பது தான் சோகம்.வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடலூர் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை நிறுத்தப்பட்டிருக்கிறது. இவை வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், இவை மட்டுமே போதுமானவை அல்ல. புயலாலும், மழையாலும் மின் கம்பிகள் அறுந்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுத்தல், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தல், குடிசைப் பகுதிகளில் சேதம் ஏற்படாமல் தடுத்தல், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.

புயல் தாக்கும் வாய்ப்புள்ள மாவட்டங்களுக்கு கடமை உணர்வும், அர்ப்பணிப்பும் கொண்ட இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை முன்கூட்டியே அனுப்பி சேதத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தை புயல் தாக்கினாலும் அதனால் பாதிப்பு இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Spread the love

Comments are closed.